"நட்டுமை' நாவலும் வரம்பு மீறிய பார்வைகளும்
‘நட்டுமை’ நாவலைப் பொறுத்தவரை பேராசிரியர் கலாநிதி எம்.ஏ. நுஃமானுக்கான பாத்திரம் ஒரு வகையானது. கவிஞர் நவாஸ் செளபிக்கான வகிபாகம் இன்னொரு கோணமானது.
முன்னையவர் நட்டுமை நாவலுக்கான ‘முன்னுரை’ என்ற உரையாடலைச் செய்தவர். பின்னையவர் நட்டுமை நாவல் குறித்து தனது விமர்சனப் பதிவை அல்லது அறிமுகக் கருத்தாடலைச் செய்யப் புறப்பட்டவர்.
கலாநிதி எம்.ஏ. நுஃமான் தமிழ்த்துறைப் பேராசிரியர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் தனக்கு வழங்கப்பட்டிருந்த பாத்திரத்தின் எல்லைக் கோட்டினை அறியாது வரம்பை மீறிச் சென்றிருக்கின்றார் என எம்மால் எண்ண முடியவில்லை.
ஏனெனில் தனது உரையாடலுக்கான வரையறையினையும், தான் வகித்த பாத்திரத்தின் செயற்பாடு என்ன என்பதை நன்கு பிரித்துணர்ந்து கற்றும், கற்பித்தும் வருகின்ற புலமைத்துவம் கொண்டவராக இருப்பதினாலுமாகும்.
ஒரு நூலில் அந்நூலாசிரியர் தவிர்ந்து மற்றவர்களினால் எழுதப்படுகின்ற முன்னுரை, மதிப்புரை, தகவுரை, அணிந்துரை போன்ற எந்தச் சொல்லாடலை முன்வைத்து உரையாடினாலும் அவை அந்த நூலுக்கான புகழுரையாகவும் பாராட்டுரையாகவும் அமைய வேண்டும் என்பதுதான் பொது நியதியும் அடிப்படையுமாகும்.
இதற்குப் புறம்பாக ‘நட்டுமை’ நாவலுக்கு வழங்கிய தனது முன்னுரையில் பேராசிரியர் நுஃமான் கருத்தாட முனைந்திருப்பது அவரது வரையறையை மீறிய அவிழ்த்தாகவே பார்க்க முடிகின்றது.
பேராசிரியர் நுஃமான் தனது உரையாடலை தனக்குரிய எல்லையிலிருந்து சில இடங்களில் விலகிச் சென்றது மட்டுமன்றி, நாவலாசிரியர் தீரன் ஆர்.எம். நெளஸாத் கருத்தாட முனைந்திருக்கும் பகுதிக்கு அப்பாலானவற்றை தொட்டுக் காட்டி, அதனைத் தொடவில்லை என சுட்டிக்காட்டி இருப்பது ஆரோக்கியமான பார்வையின் படிதல் அல்ல.
“சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய கிழக்கிலங்கை முஸ்லிம் கிராமம் ஒன்றை களமாகக் கொண்டது இந்நாவல். கிழக்கிலங்கை முஸ்லிம் கிராம வாழ்வின் ஒரு பக்கத்தை இந்நாவல் நமக்குக்காட்ட முயல்கின்றது.” (நட்டுமை பக்கம் 12) என நட்டுமை நாவல் பேச முற்படும் கதையாடலை விளங்கிக் கொண்ட பேராசிரியர் நுஃமான் மற்றோர் இடத்தில் பின்வருமாறு உரையாடுகின்றார்.
“சுதந்திரத்துக்கு சற்று முந்திய ஒரு முஸ்லிம் விவசாயக் கிராமத்தின் சமூக வாழ்வை, அதன் அசைவியக்கத்தை அதன் சகல அம்சங்களுடனும் சித்தரிப்பது ஆசிரியரின் நோக்கமல்ல என்று தெரிகிறது.” (நட்டுமை - பக்கம் 13) என பேராசிரியர் நுஃமான் குறிப்பிடுவது முன்னுக்குப்பின் முரண்படுவதாகும்.
ஏனெனில் நாவலாசிரியர் பேசுவதற்கு முற்பட்ட கருத்தாடலில் ஒரு காலத்து மக்களின் வாழ்வியல் மீதான ஒரு பக்கத்தை மையமாக வைத்து நாவல் புனையப்படுகின்ற போது அதில் அக்கால மக்களின் ஏனைய கூறுகளும் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
மாறாக, நாவலாசிரியர் தொட்ட பக்கத்தில் யாதேனும் பண்பு விடுபட்டிருப்பின் அதுபற்றி எடுத்துக் காட்டி இருக்கலாம். அவ்வாறு சுட்டுவது கூட விமர்சனப் பாங்கின் பணியாகும். எனினும் நட்டுமை நாவலைப் பொறுத்தவரை பேராசிரியர் தொடர்புபடுகின்ற பாத்திரத்திற்கு உகந்ததும் அல்ல.
“கிழக்கிலங்கை முஸ்லிம் மத்தியில் இனத்துவ அடையாள அரசியல் அதிர்வுகள் ஏற்படத் தொடங்கிய கால கட்டம் இதுதான். தங்களுக்கும் கல்வி, தொழில்வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், அரசியல் அதிகாரம் என்பன வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம்கள் மத்தியில் மேற்கிளம்பத் தொடங்கிய காலம் இது.
1936 இல் தான் கல்முனையில் முதன் முதலில் பெண்களுக்கான ஒரு பள்ளிக்கூடமும் ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய சமூக அசைவியக்கத்தை, அரசியல் அதிர்வுகளைப் பதிவு செய்வது நாவலாசிரியரின் நோக்கமாக இருக்கவில்லை. அவை இந்த நாவலின் தூரத்துச் செய்தியாகக் கூட இல்லை.” (நட்டுமை - பக்கம் 14)
பேராசிரியர் நுஃமானினால் இங்கு தொட்டுக் காட்டப்பட்டிருக்கும் மேற்படி வரிகள் வலிந்து எழுதப்பட்டிருக்கின்றன. இனத்துவ அரசியல் அதிர்வு பற்றி நட்டுமை நாவலில் பேசப்பட வேண்டிய எந்த அவசியமுமில்லை. ஏனெனில் அரசியல் விழிப்புணர்வூட்டும் வகையில் நட்டுமை நாவலின் பாத்திரங்கள் கட்டமைக்கப்படவுமில்லை. அதுபற்றிய புனைவுமல்ல இது. இந்நாவலின் நோக்கை பேராசிரியர் நுஃமானே இப்படிச் சுட்டிக்காட்டுகின்றார்.
“அரசியல் சமூக அசைவியக்கங்களிலிருந்து விலகிய ஒரு தூய முஸ்லிம் விவசாயக் கிராமத்தையும், அதன் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றையும், அக்கிராமத்து மக்களின் தனிமனித நடத்தைக் கோலங்களையும் சித்திரமாக்குவதே இங்கு நாவலாசிரியரின் நோக்கமாகத் தெரிகிறது” (நட்டுமை - பக்கம் 14)
அவ்வாறாயின் அரசியல் சமூக அசைவியக்கங்கள் இந்நாவலில் தூரத்துச் செய்தியாகக் கூட பதிவாகவில்லை என்று நாவலாசிரியரை பரிகாசித்திருப்பது நமக்கு மிகவும் வியப்பைத் தருகின்றது. இதனூடாக அதற்கு மிகவும் பொருத்தமானவராக பேராசிரியர் நுஃமான் ஆகிவிடுவதுதான் இதன் பிரதி பலிப்பாகின்றது. மற்றும் கல்வி பற்றி நட்டுமை நாவலில் பேசப்பட்டிருக்கின்றது. அது விரிவாகவும், தனிப்பாத்திரமாகவும் நாவலாசிரியர் பதிவாக்காது விட்டாலும் கூட, நாவலினிடை இடையே பள்ளிக் கூடம் நிர்மாணித்தல், அதன் ஆசிரியராக உமறுலெவ்வை நியமிக்கப்படுவதற்கு பெரிய போடியார் அகமதுலெவ்வை சிபார்சு செய்வது போன்ற கதையாடலை இந்நாவல் கொண்டிருக்கின்றது.
ஆயின் கல்வி பற்றி ஏதோ ஒரு வகையில் நட்டுமை நாவலில் கையாளப்பட்டிருக்கின்றது என்பதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. அப்படி இருந்தும் கல்வி தூரத்துச் செய்தியாகக் கூட இந்நாவலில் பேசப்படவில்லை என்று பேராசிரியர் நுஃமான் கூறியிருப்பது ஏன்?
இதுவொரு அபத்தமான சுட்டுதலாகவே எம்மால் புரிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றது. அதேநேரம் உண்மைக்குப் புறமாக பேராசிரியர் நுஃமான் பேசத் துணிந்திருக்கின்றார் என்ற பதிவையே அவர் மீது படிந்து கொள்ள வழியேற்படுகிறது.
நண்பர் நவாஸ் செளபி நட்டுமை நாவலை முன்வைத்து தனது விமர்சனத்தினை அல்லது அறிமுகத்தினை உரையாட வந்தவராவார். இவர் கடந்த 22.08.2010 இல் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பக்கம் 21 இல் “தீரன் ஆர். எம். நெளஸாத்தின் நட்டுமை கிராமியப் பண்பாடுகளின் நூதனசாலை” என்ற தலைப்பில் எழுதி இருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். நவாஸ் செளபியின் மேற்படி கருத்தாடலில் 5 ஆம் பகுதி ‘பின்குறிப்புகள்’ என்ற உப தலைப்பின் கீழ் கொண்டுவருகின்றார். இதில் தனது எல்லையை மீறி பேசத்தலைப்பட்டிருப்பதானது வரம்பு மீறிய ஒரு செயற்பாடு என்பதையும், அவர் தனது கருத்தில் அகலக்கால் வைத்ததையும் எடுத்துக் காட்டுவதாக எனது அடையாளப்படுத்தல் இங்கு பதிவாகின்றது.
“1930 களின் முற்பகுதிக்காலத்தின் கிழக்கிலங்கையின் ஆரம்பக் கிராமம் ஒன்றின் வாழ்வியல் மீதான வாசிப்பு இது” (நட்டுமை - பக்கம் 9, 10) என நாவலாசிரியர் தீரன் ஆர்.எம். நெளஸாத் தனது என்னுரையில் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
இதனை பேராசிரியர் நுஃமான் தனது முன்னுரையில் “கிழக்கிலங்கை முஸ்லிம் கிராம வாழ்வின் ஒரு பக்கத்தை இந்நாவல் நமக்கு காட்ட முயல்கிறது” (நட்டுமை - பக்கம் 12) எனக் குறிப்பிடுவதிலிருந்து இந்நாவலின் ஊடாகப் பேசப்படும் கதையின் கருப்பொருள் நமக்கு தெளிவாக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் நாவலாசிரியர் கதையாடி வந்திருக்கும் பாத்திரங்களுக்குள் விடுபட்டிருக்கும் கதையாடலைச் சுட்டிக்காட்டுவதுதான் ஓர் ஆரோக்கியமானதும், அறிவு ரீதியான விமர்சனத்தினதும், அறிமுகத்தினதும் பார்வைகளாக அமையும். இதனைத் தவிர்த்து விட்டு, தான் நினைப்பதையெல்லாம் நாவலாசிரியர் முன்வைத்திருக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்பில் உரையாடுவது ஓர் அதிகாரத் தோரணைப் பாங்கின் எச்சங்களாகவே அமையும். “அறிவியல் சார்ந்த பார்வையோ, அரசியல் சார்ந்த இயக்கமோ அச்சமூகங்களின் மீது வைக்கப்படவில்லை. தகவல்களையும், சம்பவங்களையும் மாத்திரம் அடுக்கிக் கொண்டு போவது ஒரு எழுத்தாளனின் பணி அல்ல. ஒரு சமூகத்தின் இயங்கியலையும் அவன் தனது எழுத்துக்களுக்குள் கதையாட வேண்டும்.”
இவ்வரிகளை நவாஸ் செளபி பதிவாக்குவதற்கு முன் பந்தியில், “புனைவின் காலத்தைப் பிரதிபலிக்கும் கதை மாந்தர்கள் ஒரு பண்பாட்டுச் சமூகமாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்” எனப் பதிவு செய்கின்றார்.
இந்த மதிப்பீடு மிகச் சரியானதுதான். ஏனென்றால் நட்டுமை நாவலாசிரியர் நிலை நிறுத்த முனைந்த பிரதானமான அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். இதனால் தானே நண்பர் நவாஸ் செளபி நட்டுமை நாவல் குறித்த தனது கதையாடலுக்கு “கிராமியப் பண்பாடுகளின் நூதனசாலை” என்று தலைப்பிட அவரால் முடிந்திருக்கின்றது.
பின்னர் எப்படி நவாஸ் செளபியால் நட்டுமை நாவல் கருப்பொருளாகக் கொள்ளாத “அறிவியல் சார்ந்த பார்வையோ, அரசியல் சார்ந்த இயக்கமோ அச்சமூகங்களின் மீது வைக்கப்படவில்லை” என்று ஆதங்கப்பட முடியும்? இவைகளைப் பேசுவது இந்நாவலின் முன்னீடு அல்ல என்பது தெளிவாக இருக்கும் போது அதனை ஒரு குறைப்பாடான நிறுத்தலாக முன்வைப்பது முறையல்ல.
பொதுவாக நாவல் ஒன்று எது குறித்துப் பேச வருகின்றதோ அதற்குட்படுத்தாது விலகிச் செல்லுவதை மட்டுமே கேள்வியாக்க முடியுமே தவிர அது பேசமுனையாத பக்கங்களை எல்லாம் முன்வைத்து பேசவில்லை என்று விவாதிப்பது ஒரு நேர்மையான மதிப்பீட்டு வழிமுறையல்ல. அது மட்டுமன்றி நட்டுமை நாவலைப் பொறுத்தவரை நண்பர் நவாஸ் தொடர்புபடும் விதத்தின் வரையறை மீறிய பார்வையாகவுமே அது அமைய முடியும். இவ்வாறு தொடங்கும் நவாஸ் செளபியின் தடுமாற்றங்கள் அவரது பின் குறிப்புக்களில் பெரும்பாலானவற்றில் அப்பிக் கொள்வதை நடுநிலையாக நின்று நோக்கும் எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளமுடியும். நட்டுமை நாவலாசிரியர் நாவலுக்கு எடுத்துக் கொண்ட கதையம்சத்தைப் பொறுத்தவரை அதற்குள் அகப்படுத்த வேண்டிய சம்பவங்களை மிகவும் நேர்த்தியாக வடித்துள்ளது மட்டுமன்றி, அதனூடாக அக்காலப் பதிவுகளை நம் கண்முன்னே கொண்டு வருகின்றார். இதுதான் நட்டுமை நாவலைப் பொறுத்தவரை நாவலாசிரியர் கையாண்டு இருக்கும் பாங்கிற்கு பொருத்தமான பதிவாகும்.
ஒரு கதையாசிரியர் தனது படைப்பில் சித்தரிப்புக்கு உட்படுத்திய பாத்திரங்களில் சம்பவங்களை வடிப்பது என்பதும் நாவலில் கையாளக் கூடிய வகையே. சம்பவத்தின் நிழலிலிருந்து அறிவுறுத்தல் அல்லது போதனை எனப் பேசி விழிப்புணர்வு ஊட்டுதல் என்கின்ற கையாள்தலைக் கொண்ட உத்தியும் நாவல் எழுதும் முறைமையில் பிரயோகிக்கும் நெறி முறையே.
அப்படியாயின் நட்டுமை நாவலாசிரியரின் நாவல் சித்தரிப்பு முறைமை நாவல் உத்தியை மீறிச் சென்றுவிடவில்லை என்பதுதான் உண்மை. நாவலின் சித்தரிப்பு வகைகள் பற்றிய பார்வை விரிவு நண்பர் நவாஸ் செளபியிடம் இல்லாமைதான் இப்படி முன்னுக்குப் பின் அவரை முரண்பட வைத்தும் தடுமாற்றத்திற்குள்ளாக்கியும் இருக்கின்றன.
“குறிப்பிட்டகால கதைமாந்தர்களின் வாழ்வியல் அம்சங்களில் அவர்களது விவசாய நிலங்கள் தவிர்ந்த பாய் இழைத்தல், பனை ஓலை பெட்டி பின்னுதல், கிடுகு இழைத்தல், மண்பானை சட்டி வேலைகள், கைப்பணிப் பெருட்கள் என்று குடிசைத் தொழில் அம்சஙகள் எதுவும் நட்டுமையில் கொண்டுவரப்படவில்லை.
இதற்கான கதைக் களங்களை பல இடங்களில் தோற்றுவிக்கும் நட்டுமை இவ்விடயங்களை ஓரிடத்திலும் பேசாது கை நழுவவிட்டிருக்கிறது. இவை ஒரு சமூக இயங்கியல் அம்சமாக மட்டுமல்லாது எமது வாழ்வியலோடு ஆரம்பகால அம்சங்களாக கலந்திருந்தவை.”
மேற்படி நண்பர் நவாஸ் செளபியின் சுட்டுதல்களின் ஊடாக மூன்று பிழையான அங்சங்களை நட்டுமை நாவலில் கையாண்டிருக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுமையத்தைச் சுற்றி தனது கதையாடலை முன்வைத்திருப்பதிலிருந்து நவாஸ் செளபியின் பிழையான அணுகுமுறைமை, அறியாமை போன்ற பண்புகள் வெளிப்பட்டு நிற்பதை நாம் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
1. இந்தச் சுட்டுதலில் நவாஸ் செளபி குறிப்பிடும் குடிசைத் தொழில்களில் ஈடுபடுவது பொருZட்டுவதுடன் தொடர்புபட்டது என்பதை அவரே ஏற்றுள்ளார். நட்டுமை நவாஸ் விவசாயப் பின்புலத்தைக் கொண்டது. இதற்குள் குடிசைத் தொழில் பற்றிப் பேச வேண்டிய பாத்திரத்தை எங்குமே நாவலாசிரியர் தொடவில்லை. பின்னர் எப்படி இதனைப் பற்றிப் பேச வேண்டிய கதைக்களம் உண்டென்பது?
2. எமது வாழ்வியலோடு நவாஸ் செளபி சுட்டிக்காடும் இவைகள் மட்டமல்ல, இவற்றுக்கு அப்பாலான எத்தனையோ விடயங்கள் உண்டு. அப்படி இருக்கும் அனைத்து விடயங்களையும் ஒரு நாவலில் கையாள வேண்டும் என்று கூறுவது, குறித்த ஒரு நாவலின் இயக்கைத்தன்மையைச் சிதைத்து, செயற்கைத் தன்மையை வெளிக்காட்டும் நிலையைத் தோற்றுவித்துவிடும்.
இப்படியான நிலைக்கு நட்டுமை நாவலாசிரியரைத் தள்ளிவிடுவதற்கு வழி சொல்லும் ஒருவராகவே இவ்விடத்தில் நண்பர் நவாஸ் செளபி மாறிவிடுவதையும் தனது விமர்சனம் அல்லது அறிமுகப் பாங்கின் எல்லையை உடைப்புச் செய்வதையும் நாம் தெளிவாகக் காணலாம்.
3. மண்பானை சட்டி செய்தல் எனும் உற்பத்தித் தொழிலில் நட்டுமை நாவல் சுட்டும் பிரதேச முஸ்லிம்கள் என்றும் பங்காற்றியதில்லை. அப்படி இருக்க அதனையும் விவசாயப் பின்னணியைக் கொண்ட நட்டுமை நாவலில் கொண்டு வந்திருக்க வேண்டும் என பிடிவாதம் பிடிப்பதேன்?
தகவலுக்காக:- மண்பானை சட்டி செய்தல் எனும் உற்பத்தித் தொழிலிலும், சலவைத் தொழிலிலும் நட்டுமை நாவல் குறிப்பிடும் பிரதேச முஸ்லிம்களிடம் அன்றும் சரி, இன்றும் சரி காணப்படாத தொழில் முறைமை என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பர் நவாஸ் செளபியின் இந்த முரண்பாடுகளைப் பார்க்கும் போது அவரது பாணியில் சொல்வதாயின், ‘விமர்சனத்துறையின் சறுக்கல் விளையாட்டாகவே’ இருக்கிறது எனலாம். விமர்சனக் கலை பற்றியும், நாவல் சித்தரிப்பு முறைமையில் சம்பவங்களூடாக மறைமுகமாக நாவலாசிரியர் பேசுவதுபற்றிய தேடல்கள் அவருக்கு இன்னும் அவசியப்படுகிறது என்பதையே இது நமக்கு உணர்த்தி வைக்கின்றது.
ஆக மொத்தத்தில் பேராசிரியர் நுஃமான், நண்பர் நவாஸ் செளபி ஆகியோர் நட்டுமை நாவலைப் பொறுத்து தொடர்புபடும் கட்டமைப்பிலிருந்து விலகிச் செல்லும் பக்கங்களையும் கொண்டிருக்கின்றனர் என்பது திட்டவட்டமானது. இவ்விருவரும் தமது பணியின் வரையறைகளிலிருந்து தூரமாகிச் சென்றிருப்பதானது அவர்களது எல்லை மீறிய பாய்ச்சல் என்றுதான் அடையாளப்படுத்த வேண்டி இருக்கின்றது.
எம்.எம்.எம். நூறுல்ஹக்...-
சாய்ந்தமருது - 05
|
No comments:
Post a Comment